கோவை: கோவையில் டிரான்ஸ் கிச்சன் என்ற உணவகத்தை நடத்தி வந்த சங்கீதா என்ற திருநங்கை கோவை சாயிபாபா காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில், உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக பிளாஸ்டிக் டிரம்மில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் டிரான்ஸ் கிச்சன் என்ற உணவகத்தை நடத்தி வந்த சங்கீதா என்ற திருநங்கை கோவை சாயிபாபா காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில், உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக பிளாஸ்டிக் டிரம்மில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா(60). இவர், கோவையிலுள்ள திருநங்கைகள் நல்வாழ்வு மேம்பாட்டிற்கு, சாலை ஓர உணவகம் அமைக்க என பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வந்துள்ளார்.
இவர் சமீபத்தில், வடகோவை பகுதியில் டிரான்ஸ் கிட்சன் என்ற உணவு விடுதியை சக திருநங்கைகளை கொண்டு துவங்கினார். தமிழகத்தில் இந்த உணவகம் முழுக்க முழுக்க திருநங்கைகளால் துவங்கப்பட்டு செயல்பட்டு வந்த முதல் உணவகம் ஆகும்.இந்த உணவகத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

இந்நிலையில் திருநங்கை சங்கீதா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்து பிளாஸ்டிக் டிரம்மில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது உடல் இன்று மீட்கப்பட்டது. சாய்பாபா காலனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அருகே உள்ள அவரது குடியிருக்கும் பகுதியில் பலத்த துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து, அருகில் உள்ளவர்கள் சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு சோதனை செய்தபோது வீட்டின் பின்புறம் பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது கண்டு பிளாஸ்டிக் டிரம்மை திறந்து பார்த்த போது, அதனுள் அழுகிய நிலையில் சங்கீதா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இறந்த அந்த நபர் திருநங்கை சங்கீதாதான் என்பதை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேற்கொண்டு நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகி இருக்கலாம், எனவும் அவரைக் கொன்று பிளாஸ்டிக் ட்ரம்முக்குள் அடைத்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த கொலை சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவே அழுகிய நிலையில் திருநங்கை சங்கீதா சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், அவர் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.