பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்மழை காரணமாக பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியது
கோவை: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்மழை காரணமாக பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியது. பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் வழியாக வினாடிக்கு 1600 கன அடி தண்ணீர் வெளியேற்றம்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே கடந்த மாதம், வால்பாறை அருகே உள்ள 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை, முழு கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 71 அடியாக இருந்தது.
தொடர்ந்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் வழியாக, வினாடிக்கு 1600 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும், 1,054 கன அடி தண்ணீர் தூணக்கடவு அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.மாலை நான்கு மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,700 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. மேலும், அணையின் நீர் வரத்தை பொறுத்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு மாறுபடும், என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.