கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனி வீடுகளில் வசித்தால் அவர்களின் வீடுகளை தகரம் கொண்டு அடைப்பதற்கு பதிலாக இனி நோட்டீஸ் ஒட்டப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனி வீடுகளில் வசித்தால் அவர்களின் வீடுகளை தகரம் கொண்டு அடைப்பதற்கு பதிலாக இனி நோட்டீஸ் ஒட்டப்படும், என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, உரிய வசதி இருந்தால் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி அனுமதி அளிக்கப்படுகிறது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்கவும், அந்த வீட்டை சேர்ந்த நபர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்கவும், அவர்களது வீடு தகரம் கொண்டு மறைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனி வீடுகளில் வசித்தால், அவர்களின் வீடுகளை தகரம் கொண்டு மறைப்பதற்கு பதிலாக, 'இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்ற நோட்டீஸ் மட்டுமே ஒட்ட மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி பகுதியில் யாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அவர்கள் வசித்த வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் 14 நாட்களுக்கு தகரம் கொண்டு மறைக்கப்பட்டு வந்தது.
தற்போது, இதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு தெருவில் தனி வீட்டில் வசிக்கும் நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவரது வீடு இனி தகரம் கொண்டு மறைக்கப்படாது. அதற்குப் பதிலாக, இது தனிமைப் படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீஸ் ஓட்டப்படும்.
இதனை, மீறி அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் அவர்கள் மீது போலீஸ் மூலம் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு தெருவில் 1-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது தனி வீடு இல்லாமல் பல வீடுகள் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கண்டிப்பாக அந்த வீடு தகரம் கொண்டு அடைக்கப்படும், இவ்வாறு அவர் கூறினர்.