கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு நள்ளிரவில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற வந்த கொரோனா நோயாளி அலைக்கழிக்கப்பட்டதாக, அவர் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு நள்ளிரவில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற வந்த கொரோனா நோயாளி அலைக்கழிக்கப்பட்டதாக, அவர் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர், அதே நாள் தான் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து குணமடைந்து விட்டதாக வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை கிருஷ்ணா நகர், சொக்க முத்து விதியை சேர்ந்த 56 வயதான கிருஷ்ணவேனிக்கு கடந்த பத்து நாளுக்கு முன்பாக ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது, அங்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவித்து, கிருஷ்ணவேனியை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அவரை அழைத்து வந்துள்ளனர்.
ஆனால், நான்கு மணி நேரத்திற்கு மேலாக சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்ததாக, அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செய்வதறியாது தவித்த அவர் குடும்பத்தார், கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற முயன்றுள்ளனர். ஆனால், அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால், இறுதியில் போலீசாரின் உதவியால் மீண்டும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணவேனியின் மகன் ரித்திஸ் கூறுகையில், அவர் தாயாருக்கு கொரோனோ நோய்த்தொற்று குணம் ஆகாமலே, குணமடைந்து விட்டதாக சொல்லி இஎஸ்ஐ மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக, குற்றம் சாட்டினார்
மேலும், அவருக்கு சர்க்கரை நோய் உள்ளதாகவும், இதற்கிடையே மூச்சுத்திணறல் பிரச்சனையும் இரவு ஏற்பட்டதாக கூறிய அவர், சிகிச்சைக்காக பல்வேறு தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் சென்ற போது இஎஸ்ஐ மருத்துவமனைக்கே மீண்டும் அழைத்துச் செலுங்கள் என்று கூறி அவர் தாயாருக்கு சிகிச்சையளிக்க மறுத்து விட்டதாக, தெரிவித்தார்.
தன் நோயுற்ற தாயாருடன், நள்ளிரவு நேரத்தில் கோவை முழுவதும் பயணிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தார்.
பின்னர், மீண்டும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்க்க கூறி போலீசாரிடம் அணுகிய பின்னரே, இன்று அதிகாலை நான்கு மணி அளவில் இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகத்தினர்,
அவர் தாயாரை சிகிச்சைக்காக அனுமதித்ததாக ரித்திஷ், தெரிவித்தார்.
இது போன்ற அவல சம்பவங்கள் நடைபெறாத வகையில் சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.