நெசவாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கைத்தறி ஆடைகளை வாங்கி அணிவோம்.
உழபவனின் கையில் ஏர்; நெய்பவனின் கையில் தறி என்கிறது பழமொழி.
உழபவனுக்கு நிலம் இல்லை போன்று நெய்பவனுக்கு ஆடை இல்லை என்பது தான் இன்றைய எதார்த்தம். வெறுமனே உயிரை காப்பாற்றவதற்கு தேவையான வாழ்வாதாரங்களுடன் வாழ்பவனே இன்றை விவசாயியும், நெசவாளியும் ஆவர். கைத்தறிக்கு புகழ்போனது தான் நம் பாரதம். காசுக்காக மட்டும் உழைப்பவர்கள் அல்ல நெசவாளிகள்.
நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்பவனே உண்மையான தொழிலாளி. விவசாயம் எந்தளவுக்கு பழமையானதோ அந்தளவு கைத்தறி நெசவும் மிகப்பழமையான நுட்பங்கள் வாய்ந்தது. உழுத கால்களும், நெய்த கைகளும் ஓய்வறியாதவை என்பது ஆன்றோர் வாக்கு. அக்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கைகளால் நெசவு செய்த துணியை தான் தொட்டில் கட்ட பயன்படுத்துவார்கள். அதில் சுத்தமான காற்றும், ஆரோக்கியமும் கிடைக்கும். ஆனால் தொழிற்நுட்பங்கள் வளர அந்த பழக்கம் இல்லாமலே போய்விட்டது.
பெரிய பெரிய விளம்பரங்களில் நடிகைகள் அழகாக பட்டு உடுத்தி நடித்ததை பார்த்து இருப்போம். ஆனால் பளபளக்கும் பட்டுக்குப் பின்னால் இருக்கும் துயர கதை யாருக்கும் தெரியவில்லை. பட்டின் கதையை பட்டுனு சொல்ல முடியாது. இது பட்டுப்புழு பட்டுப்புடவையான நீண்ட கதையாகும். இங்கு கைத்தறியில் உற்பத்தியாகும் பட்டுக்கு அதிக வேலைப்பாடுகள் உண்டு. இதற்கு ஒரு ஆள் உழைப்பல்ல ஒட்டுமொத்த குடும்பத்தின் உழைப்பும் தேவைப்படுகிறது. இதுல நுணுக்கமான வேலையினையும், சாமர்த்தியமாகவும், சாதுரியமாகவும் செய்யும் நெசவாளர்களுக்கு நேரம், காலம் கிடையாது. வாழ்க்கையுடன் இணைந்தே இருக்கு.
கைத்தறி தினம் :
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது அந்நிய துணிகளை புறக்கணிக்கும் விதமாக சுதேசி இயக்கம் 1907ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் விளைவாக நாட்டு மக்களிடையே கைத்தறி தொழில் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கைத்தறி தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய மாநில அரசுகள் இந்த தொழிலை ஊக்குவித்து வருகிறது.
பெரிய கம்பெனி, கை நிறைய சம்பளம், தினமும் பிராண்ட் டிரஸ் என வாழ்க்கையை அழகாக வாழ்ந்து இருக்க முடியும். ஆனால் இது எத்தனை நாளுக்கு சந்தோஷத்தையும் மன அமைதியும் தரும். இதுவல்ல மன அமைதி என்று தனது வேலையை ராஜினாமா செய்து கைத்தறி நெசவு செய்து வருகிறார் ஈரோடு சென்னிமலை பகுதியைச் சார்ந்த சிவகுருநாதன். 11 வருட ஐடி வேலை, இடமாற்றங்கள் என வாழ்க்கை வாழ்ந்தவர் நம்மாழ்வார் ஐயாவை சந்தித்து பிறகு தனக்கான தேடலை தெரிந்து கொண்டதை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். முதன் முதலில் திருவண்ணாமலையில் நம்மாழ்வார் ஐயாவை சந்தித்தேன். அதன் பிறகு காந்தியம் சார்ந்த கொள்கைகளை எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் பயணிக்க ஆரம்பித்தேன்.
அனைவரும் சொன்னார்கள் இது ரொம்ப கஷ்டம், எதுவும் கிடைக்காது என்று தான் முதல் வாழ்த்து கிடைத்தது. ஆனால் குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பு சார்ந்த சிவராஜ் அண்ணா தான் இன்று இது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் உன்னை உயர வைக்கும் என்றார். கைத்தறி மற்றும் கைத்தறி நாடா மீது சிறுவயதில் இருந்தே அதிக ஈடுபாடு. இதை அறிந்த என் நண்பர் கர்நாடகாவில் உள்ள காந்தி, வினோபாவே மற்றும் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களுடன் பணியாற்றிய சுரேந்திர கௌலாகி அவர்களை சந்திக்க அழைத்துச் சென்றார். அங்கு அவர் மூன்று தலைமுறையாக நெசவு தொழில் செய்துவருபவர். என் விருப்பத்தை சொன்ன போது இப்போது எல்லாம் நிறைய பேர் தனக்கு கிடைத்த வேலையை விட்டுவிட்டு விவசாயமோ அல்லது சமூகம் சார்ந்த தொழில்களை தொடங்குகிறார்கள். கதர் கைத்தறி என்பது விவசாயத்தைப் போன்ற வாழ்க்கை முறை தான். இங்கு லாபம் நஷ்டம் போட்டு தொழில் செய்ய முடியாது என்கிறார்.
என் வேலையை துறந்து பாரம்பரியமாக நெசவு செய்யும் ஆட்களை எல்லாம் சந்தித்து பேசினேன். அதன் பின் அக்டோபர் 2, 2016 ஆம் ஆண்டு நூற்பை தொடங்கினோம். ஆரம்பித்த இரு வருடங்கள் முழுவதும் அனுபவத்தை மட்டுமே சந்தித்தேன். இதில் கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தது. நாங்களும் நெசவு குடும்பமாக இருந்ததால் நெசவு எனக்கு புதிது அல்ல. சென்னிமலையில் 1010 என்ற நெசவு குடியிருப்புகள் உண்டு. இங்குள்ள அனைவரும் நெசவு தொழில் செய்தவர்கள் தான். இன்றைய நிலைக்கு கைத்தறி நெசவு தொழில் செய்வோரின் எண்ணிக்கை குறைவு தான்.
கொரோனா காலத்திலும் எங்கள் பணி இயங்கி கொண்டு தான் இருந்தது. தாய்க்கு அடுத்த படியாக அதிக நேரம் இருப்பது தொட்டிலில் தான். அதனால் தான் இந்த பயணத்தில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தொட்டில் சீலை கொடுக்கலாம் முடிவு செய்தோம். இந்த நோயுற்ற காலத்தில் எந்த பொருளையும் வாங்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் தாய்மார்களுக்கு கொடுக்க இருக்கிறோம். பிறந்த குழந்தைக்கு அம்மாவின் ஸ்பரிசம் எப்படியோ அது போல தான் தொட்டில் துணியும். எப்படி குழந்தைக்கு கொடுக்கும் உணவில் கவனம் செலுத்துகிறோமோ அது போல தான் உடுத்தும் உடையிலும் அதன் சுழற்சி தன்மை, ஆரோக்கியம் பார்க்க வேண்டும். பருத்தி கொண்டு உருவாக்கிய தொட்டில் துணி கண்டிப்பாக குழந்தையுடன் உறவாடும் என்பது எங்கள் நம்பிக்கை.
வாரம் முழுவதும் விசைத்தறியில் உருவான ஆடைகளை பயன்படுத்துகிறோம். வாரத்தில் ஒரு நாளாவது கைத்தறியால் நெசவு செய்த ஆடையை பயன்படுத்துங்கள். இது அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். விலை அதிகம் தான் அதில் உண்டான உழைப்பும் அதிகம் தானே. 90-களில் எல்லாம் கைவேலை பள்ளிப்படிப்புகளில் ஒரு பாடமாக இருக்கும். தற்போது அதை சொல்லித் தர யாரும் இல்லை. இவற்றை கருத்தில் கொண்டு நூற்பு கைத்தறி பள்ளியை ஆரம்பிக்க உள்ளோம்.
நெசவு, விவசாயத்தை போன்றது தான். இந்நாளில் நெசவுக்கும், நெசவாளர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக கைத்தறி ஆடைகளை வாங்கி அணியுங்கள் என்கிறார்.
கைத்தறி ஆடைகளை வேண்டுவோர் http://www.nurpu.in/ இணையதளத்தை அணுகலாம்.