கோவை: கோவையில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மாநகரில் சேதமடைந்த மரங்களை கண்டறிந்து அகற்றவும், சேதமடைந்த மரக்கிளைகளை வெட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 555.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், மாநகரில் உள்ள சேதமடைந்த மரங்கள் சாயும் அபாயமும், மரக்கிளைகள் முறிந்து சாலை மற்றும் மின் கம்பங்கள் மீது விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்றவும், தாழ்வான பகுதிகளில் மழைநீரால் சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சேதமடைந்த மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதில், காற்றின் வேகத்திற்கு தாக்குபிடிக்க முடியாத சேதமடைந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டி அகற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளோம்,’’ என்றார்.