கோவை: கொரோனா ஊரடங்கு நாட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பொருளாதாரம், பண வீக்கம், புலம் தொழிலாளர்கள் பிரச்சினை , பெருந்தொற்று, வேலையின்மை என்று சொல்லி கொண்டே போகலாம்.
கோவை: கொரோனா ஊரடங்கு நாட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பொருளாதாரம், பண வீக்கம், புலம் தொழிலாளர்கள் பிரச்சினை , பெருந்தொற்று, வேலையின்மை என்று சொல்லி கொண்டே போகலாம்.
இதை எல்லாம் மீறி இந்த ஊரடங்கு நமக்கு என்ன கொடுத்தது என்று கேட்டால் சுற்றுப்புறத்தை தூய்மை செய்ய ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறது. மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும் இந்த காலகட்டம் இயற்கை தன்னை புதுப்பிக்கப் பயன்படுத்தி கொண்டிருக்கிறது என்று சொல்கின்றனர் சுற்று சூழல் ஆர்வலர்கள்.
குறிப்பாக, வனவிலங்குகளுக்கு இது ஒரு வசந்த காலம் என்றே சொல்லாம். மலை மற்றும் வனப் பாதைகளில் வாகன போக்குவரத்து குறைந்துள்ளதால், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன் வண்டலூர் பூங்காவில் விலங்குகளுக்கு உணவு கொடுப்பது பற்றாக்குறை இருப்பதாக செய்தி ஒன்று வெளியானது. அதிக செலவில் பராமரிக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இந்த நிலைமை என்றால் நம்மூர் வ.ஊ. சி உயிரியல் பூங்கா எப்படி இருக்கிறது என்று பார்க்க ஒரு விசிட் அடித்தோம்...
கொரோனா காலத்தில் எப்படி இருக்கிறது நம்ம கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா..?
கோவை மாவட்டத்தில் சுவாரஸ்யமான சுற்றுலாதளங்களில் ஒன்று தான் வ.உ.சி உயிரியல் பூங்கா. கோவை மாநகராட்சிக்கு கீழ் செயல்படும், இப்பூங்கா கோவை பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு முக்கியமான பொழுதுபோக்கு இடமாக கருதப்படுகிறது.
எப்போதும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இப்பூங்காவானது ஆள் நடமாட்டமின்றி பார்ப்பதற்கு வெறிச்சோடி இருந்தாலும், அங்கு இருக்கும் வன விலங்குகள் ஆரவாரமின்றி இயல்பான தன்மையுடன் இருக்கிறது.
18 வருடங்களுக்கு பிறகு பிறந்த ரோஸி பெலிக்கன் குஞ்சுகள் தன் தாயுடன் அழகாக சுற்றி வருகிறது. பொதுமக்கள் வருகை தரும் போது தன்னுடைய இயல்புகளை காட்டாத பாம்புகள் இன்று சுறுசுறுப்புடன் இருந்தன.
பச்சைகிளிகள் (parakeets,macaw), முதலைகள், சாம்பார் மான், புள்ளி மான், நரி என அங்குள்ள அனைத்து மிருகங்களும் அச்சமின்றி அமைதியான சூழலில் வாழ்கிறது என்றே சொல்லலாம்.
எந்த வித குறைபாடுகளும் இல்லாமல் விலங்குகளுக்கு உணவு கொடுக்கப்படுகிறது - பூங்கா இயக்குநரும், மருத்துவராகிய செந்தில்நாதன்
இந்த ஊரடங்கு காலத்திலும் கூட எந்த வித குறைபாடுகளும் இல்லாமல் விலங்குகளுக்கு உணவு கொடுக்கப்படுகிறது என்கிறார் பூங்கா இயக்குநரும், மருத்துவராகிய செந்தில்நாதன்.
ஊரடங்கு அறிவிப்பால் விலங்குகளுக்கு எந்த வித பாதிப்பு இல்லை எனவும், சரியான நேரத்திற்கு உணவு அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
குறிப்பாக, நோய் பரவும் அபாயம் நிலவி வருவதால், பூங்கா மற்றும் விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கும் கூண்டுகள் மிகுந்த சுகாதாரத்துடன் பராமரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
மக்கள் வருகை தரும் போது அவற்றை போட்டோ எடுப்பதும், தொடுவதாகவும் இருப்பார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் அதன் சுதந்திரத்தன்மையுடன் இருப்பதாக, கூறுகிறார்.
விலங்குகளுக்கு உணவு வழங்கல் குறித்து மேலும் ஒருவரிடம் கேட்ட போது, கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் உணவு பற்றாகுறை என்ற பேச்சுக்கு இடமில்லை. சரியான நேரத்தில், தேவையான அளவில், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது, என்றார்.
மேலும் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் பூங்கா முடி இருப்பது சரியான முடிவாகும். இங்குள்ள விலங்களுக்கு தொற்று ஏற்பட்டால் அனைத்து விலங்குகளுக்கும் பரவி விடும் அபாயம் உள்ளது, என்றார்.