கோவை: இலங்கையை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.
கோவை: இலங்கையை சேர்ந்த போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழல் உலகத் தலைவன் லசந்தா சந்தனா பெரேரா என்கிற அங்கொட லொக்கா. இலங்கையில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவனை இலங்கை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அங்கிருந்து தப்பி இந்தியா வந்த அங்கொட லொக்கா பிரதீப் சிங் என்ற பெயரில் கோவையில் 2019 முதல் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
சரவணம்பட்டி பகுதியில் தங்கி இருந்த அங்கொட லொக்கா தனது காதலியான இலங்கையின் கொழும்பு நகரைச் சேர்ந்த அமானி தான்ஜி(27) என்ற இளம்பெண்ணுடன் வசித்து வந்துள்ளான். இவர்களுக்கு மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (32) என்ற பெண் உதவியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 3ம் தேதி அங்கொட லொக்காவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக சிவகாமி சுந்தரியும் அமானி தான்ஜியும் அவனை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அங்கொட லொக்காவை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, அங்கொட லொக்காவை கோவை அரசு மருத்துவமனைக்கு இருவரும் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிவகாமி சுந்தரி அங்கொட லொக்காவை தனது உறவினர் என்றும் அவனது பெயரை பிரதீப் சிங் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அங்கொட லொக்காவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். அங்கொட லொக்காவின் உயிரிழப்பு தொடர்பாக சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்ய பரிந்துரைத்தனர்.
இது தொடர்பாக சிவகாமி சுந்தரி பீளமேடு காவல் நிலையத்தில் தனது உறவினர் பிரதீப் சிங் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகவும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதீப் சிங் என்ற பெயரில் போலி ஆதார் அட்டையை சமர்ப்பித்து ஜூலை 4ம் தேதி புகார் அளித்தார்.
இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அங்கொட லொக்காவின் உடல் சிவகாமி சுந்தரியிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சிவகாமி சுந்தரியும், அமானி தான்ஜியும் அங்கொட லொக்காவின் உடலை சிவகாமி சுந்தரியின் சொந்த ஊரான மதுரைக்கு எடுத்துச் சென்று தகனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கை பீளமேடு காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டதில் இறந்து போன நபர் இலங்கையைச் சேர்ந்த மதுமா சந்தனா வசந்தா பெரேரா என்கிற அங்கொட லொக்கா என்பதும் இலங்கை அரசால் தேடப்படும் முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்துள்ளது. இவனுடன் தங்கியிருந்த அமானி தான்ஜி என்ற பெண் இலங்கையின் கொழும்பு நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், கோவையில் தலைமறைவாக இருந்த அங்கொட லொக்காவுக்கும், அமானி தான்ஜிக்கும் பெயர் மற்றும் நாட்டின் குடியுரிமையை மறைத்து போலி ஆதார் அட்டை எடுக்க, போலி ஆவணங்களை சிவகாமி சுந்தரியும் அவரது நண்பரான திருப்பூரில் வசித்துவரும் ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன் (32) என்பவரும் உதவியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்ததாக பீளமேடு காவல் நிலையத்தில் புதிய வழக்குப் பதிவு செய்து சிவகாமி சுந்தரி, அமானி தான்ஜி ஆகியோரை சேரன் மாநகர் பகுதியில் வைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தியானேஸ்வரனை ஈரோடு இந்திராநகர் பகுதியில் வைத்து கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர்கள், கத்தார் தினார், செல்போன்கள், லேப்டாப், போலி ஆதார் கார்டு நகல் மற்றும் பல சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டது. தியானேஸ்வரனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் தியானேஸ்வரனை பெருந்துறை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சிவகாமி சுந்தரியையும், அமானி தான்ஜியையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த ஏற்கனவே நீதிபதி உத்தரவிட்ட நிலையில் 2 மாத கர்ப்பிணியாக இருந்த அமானி தான்ஜிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்தார்.
இதனையடுத்து, அமானி தாஞ்சி சிறைவாசிகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் சிவகாமி சுந்தரி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான அங்கொடா லொக்கா மற்றும் அமானி தான்ஜியுடன் மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரிக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது அங்கொட லொக்காவுக்கும் அமானி தான்ஜிக்கும் என்ன தொடர்பு?அங்கொட லொக்காவின் உடலை மதுரைக்கு எடுத்துச் சென்று எரிக்க என்ன காரணம்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கோவை காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இறந்து போன அங்கொட லொக்காவின் மீது சென்னை மத்திய குற்ற பிரிவில் போலி பாஸ்போர்ட் வழக்கில் 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டது காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.