மாவட்டங்களுக்கு இடையேயான இ-பாஸ் முறையில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தும் கோவை விவசாயிகள், தொழில் துறையினர் மற்றும் பொது மக்கள்
கோவை: தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு விதிமுறைகள் தளர்வுகளுடன் தொடரும் எனவும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைப்பட்டறைகள், 1.5 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு தொழில்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளித்துறை தொழில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெட் கிரைண்டர் தொழில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பம்புசெட் மற்றும் மோட்டார், உதிரிபாகங்கள் தொழில், இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் என பல்வேறு தொழில்நிறுவனங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு மார்ச் 24ம் தேதி முதல் தற்போது வரை தொழிலாளர்கள், விவசாயிகள், மருத்துவ பணியாளர்கள், தொழில் நிமித்தமாக வெளியூர் செல்வோர் என பல்வேறு தரப்பினரும் இ- பாஸ் நடைமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் இ-பாஸ் நடைமுறையில் மாற்றம் இல்லை, பழைய நடைமுறையே தொடரும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு தொழில்துறையினர், விவசாயிகள், மக்கள் என அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது.
விவசாயம்
"இ பாஸ் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தாவிட்டால் விளைபொருட்கள் வீணாகும் அவலம் ஏற்படும்"
மாவட்டம் முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை நம்பி 1.5 லட்சம் விவசாயிகளும் மறைமுகமாக 1 லட்சம் விவசாய தொழிலாளர்களும் உள்ளனர்.
கோவை மாவட்டத்திற்கு அருகில் உள்ள திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் பணிகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு. பழனிசாமி கூறுகையில், ‘‘விவசாய வேலைக்கு வரும் கூலி தொழிலாளிகள் பலரும் அருகில் உள்ள மாவட்ட எல்லைகளில் இருந்து வருபவர்களாக இருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக விளைபொருட்களை அறுவடை செய்ய கூலி ஆட்கள் வருவதில் சிக்கில் உள்ளது. அவர்களுக்கு இ பாஸ் மறுக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளுக்கு இ பாஸ் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். இல்லை என்றால் விளைபொருட்கள் வீணாகும் அவலம் உள்ளது, என்றார்.
தொழில்துறை
"தொழில் சார்ந்த வேலைகள் தங்கு தடையின்றி நடைபெற இ பாஸ் முறையை தளர்த்த வேண்டும்"
தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேக்ட் ஜேம்ஸ் கூறுகையில்: அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற பிற மாவட்டம் மற்றும் பிற மாநில தொழிலாளர்கள் திரும்பி வர ஏதுவாக, பஸ் மற்றும் ரயில் சேவையை அனுமதிக்க வேண்டும். தொழிற்சாலைகளால், தனியாக பஸ் ஏற்பாடு செய்து பிற மாநிலதொழிலாளர்களை அழைத்து வர முடியவில்லை.
இந்த சூழலில், பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் அனுமதி தேவை என்பது தொடரப்பட்டாலும், தொழிற்சாலைகளுக்கு இ-பாஸ் தடையின்றி, எளிதாக வழங்கி, தொழில் சார்ந்த வேலைகள் தங்கு தடையின்றி நடைபெற உதவ வேண்டும்.
சிறு குறு தொழில்கள் பொருளாதார பாதிப்பிலிருந்து, புத்துணர்வுடன் மீண்டு வர இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும், என்றார்.
பொது மக்கள்
ஊரடங்கால் பெரும் அளவில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. சிலர் வேலைக்காகவும், உறவினர்களை பார்க்கவும், பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யவும் அருகில் உள்ள மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கும் செல்ல முடியாமல் பல மாதங்களாக தவித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு செல்ல மட்டுமே இ பாசுக்கு தடை விதிக்க வேண்டும். பிற இடங்களுக்கு செல்ல மக்களை அனுமதிக்க வேண்டும்.
"வசதி படைத்தவர்கள், அரசியல் செல்வாக்கு உடையவர்களுக்கு இ பாஸ் எளிதில் கிடைக்கும், சாமானியர்களுக்கு கிடைப்பதில் சிரமம் உள்ளது"
இது குறித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நியூட்டன் என்பவர் கூறுகையில், ‘‘ஊரடங்கால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதார காரணங்களுக்காக கூட அருகில் உள்ள மாவட்டங்களுக்கு செல்ல முடியவில்லை. அரசு சார்பில் இ பாஸ் நடைமுறையில் மாற்றம் அளிக்காவிட்டால் மனதளவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். வசதி படைத்தவர்கள், அரசியல் செல்வாக்கு உடையவர்களுக்கு இ பாஸ் எளிதில் கிடைக்கும், சாமானியர்களுக்கு கிடைப்பதில் சிரமம் உள்ளது, என்றார்.
"நெருங்கிய உறவினர்களின் ஈம சடங்குகளில் கூட பங்கு பெற முடியாத மன அழுத்தத்தில் மக்கள் உள்ளனர்"
மேலும், இ பாஸ் முறையில் தொடர்ந்து வரும் சிக்கல் குறித்து பகிர்ந்து கொண்ட பொது மக்களில் ஒருவர், இதுவரை யாருமே கண்டிராத அசாதாரணமான சூழலில் நாம் அனைவரும் உள்ளோம். வேகமாக பரவும் இந்த நோயை கட்டுபடுத்த அரசு பெரிய அளவில் திட்டங்களை வகுத்து மக்களை காக்க பாடுபடுவதில் உள்ள சிரமம் புரிகிறது. அதே சமயம், கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் பெரும் மன அழுத்தத்தில் உள்ளனர், என்றும் நெருங்கிய உறவினர்களின் ஈம சடங்குகளில் கூட பங்கு பெற முடியாத சூழல் வேதனையை அளிப்பதாக, தெரிவித்தார்.
"இம்முறையை மாற்றி, முக கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடித்து மக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும் நோய் தொற்று அதிகம் உள்ள இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை, மற்ற இடங்களுக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம், அரசிடம் பரிந்துரைக்க வேண்டும்", என்று கேட்டுக்கொண்டார்.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்திற்குள் வருவோரை அனுமதிக்க மட்டுமே இ-பாஸ் அதிகாரம் அதிகாரிகளுக்கு உள்ளது. இது அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். மாதம் சுமார் 40 ஆயிரம் பேர் வரை கோவை வருவதற்கு இ பாஸ் அனுமதி கோருகிறார்கள். அரசின் விதிமுறைகள் படி அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. கோவையில் இ-பாஸ் நடைமுறையில் மாற்றம் இல்லை, பழைய நடைமுறையே தொடரும்,’’ என்றார்.