கோவை: சிங்காநல்லூர் காவல் எல்லையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சந்தன மரங்களை கடத்திச் சென்ற நிலையில், மீண்டும் இரவில் ஆயுதங்களுடன் நடமாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சந்தன மரங்களை கடத்திச் சென்ற நிலையில், மீண்டும் இரவில் ஆயுதங்களுடன் நடமாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு துவங்கியதிலிருந்தே சந்தன மரக் கடத்தல் சம்பவம் அதிகரித்தது.
குறிப்பாக, கோவை மாநகரில் உள்ள காட்டூர் காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, பந்தய சாலை காவல் எல்லை, குனியமுத்தூர் காவல் எல்லை, ஆர்எஸ்புரம் காவல் எல்லை என தொடர்ச்சியாக சந்தன மரத்தை வெட்டி கடத்திய கடத்தல்காரர்கள் கடைசியாக சிங்காநல்லூர் காவல் எல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தன மரக்கட்டைகளை கடத்திச் செல்லும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியானது.
மர்ம நபர்களை கைது செய்ய தீவிரம் காட்டிய தனிப்படையினர் ;-
இதனை தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்ய மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி சாய்பாபா காலனி பகுதியில் சந்தனமர வேட்டை நடைபெற உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிங்காநல்லூர் காவல் எல்லை உட்பட பல்வேறு பகுதிகளில் சந்தனமர கடத்தலில் ஈடுபட்ட கோவிந்தராஜ், விஷ்ணு மற்றும் அன்பு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
மீண்டும் ஆயுதங்களுடன் வலம் வரும் மர்ம கும்பல் ;-
கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட இருகூர் அருகே உள்ள தீபம் நகர் பகுதியில் நேற்று 23ம் தேதி மர்ம நபர்கள் 7 பேர் மேல் சட்டையின்றி, கையில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் உலா வந்துள்ளனர். இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் விசாரணை ;-
இந்த நிலையில் இந்த மர்ம நபர்கள் குறித்து மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சூலூர் காவல் எல்லையில் நேற்று மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் மர்ம கும்பல் குழுவிற்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.