கோவை: கோவையின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.33 அடியாக குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கோவை: கோவையின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.33 அடியாக குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கோவையை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. மேலும் 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டது.
இந்நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும் நூற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் சுமார் 10 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் சிறுவாணி அணையில் இருந்து 6 கோடி லிட்டர் தண்ணீர் வரை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிறுவாணி அணை பகுதிகளில் நேற்று 78 மி.மீ மழை பெய்துள்ளது. இருப்பினும் தற்போது அணையின் நீர்மட்டம் 2.33 அடியாக உள்ளது.
தொடர்ந்து அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் எடுக்க தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் கிடைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.