கோவை: கோவை மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில், கொரோனா சிகிச்சைக்கென்று பிரத்யேக வசதிகளுடன் கொடிசியா வளாகத்தில் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ள அரங்கத்தினையும், மசக்காளிப்பாளையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் இன்று(30.06.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண்குமார் இ.ஆ.ப., துணை ஆணையாளர் மதுராந்தகி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கிருஷ்ணா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார், கண்காணிப்பாளர் ரவிக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்செல்வள், வட்டாட்சியர்கள் மகேஸ்குமார், அருள்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில், கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் வகையில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை COVID-19 சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பிரத்யேக வார்டுகள் அமைத்திடவும், தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அரசு அறிவுரை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, கொரோனா அறிகுறியில்லாத நிலையில் தொற்று உள்ளவர்களுக்கு என தனியாக சிகிச்சை அளித்திட ஏதுவாக கோயம்புத்தூர் கொடிசியா வளாக அரங்கில் 400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள பிரத்யேக கண்காணிப்பு மையத்தினை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் குறித்து மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த மையம், இந்த வாரம் முதல் செயல்பட துவங்கும். துணை இயக்குநர்(சுகாதாரம்) அவர்களது ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையில் இம்மையம் செயல்படும். இம்மையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.
வெளிமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மற்றும் இரயில்கள் மூலம் கோவை மாவட்டத்திற்குள் வருகை புரிந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. தற்போது இரயில், விமானச் சேவைகள் இல்லாத நிலையில் வெளியிலிருந்து கோவை மாவட்டத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மேலும், ஏற்கனவே வந்தவர்களுக்கு அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் குடும்பத்தினர், அருகில் வசிப்போர், தொடர்பில் இருந்த நபர்கள் ஆகியோருக்கு தொடர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கோயம்புத்தூர் மாநகரப்பகுதிகளான மசக்காளிப்பாளையம் பகுதியிலுள்ள லால்பகதூர் நகர், லட்சுமிபுரம், பெரியார் நகர் ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருக்கவும், அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கும் மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உறுதி செய்திட உத்தரவிட்டதுடன், இப்பகுதிகளில் தினமும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களை தொடர்ந்து கண்காணித்திட கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் சமூக இடைவெளி பின்பற்றுதல், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருதல் மற்றும் குளிர்சாதன வசதி செயல்பாட்டில் உள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, குளிர்சாதன வசதிகள் பயன்பாட்டில் இல்லை என்பதை அலுவலர்கள் அவ்வப்போது தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகள், உணவின் தரம், அளவு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், அவர்களும் வழங்கும் உணவின் தரம் குறித்து உண்டு பரிசோதனை செய்தார்.
அப்போது, உணவின் தரம் மிக சிறந்த முறையில் இருப்பதாகவும், இதனை தொடர்ந்து கண்காணித்திடவும் குறித்த நேரத்திற்கு உணவு வழங்குவதை கண்காணித்திடவும் மருத்துவமனை முதல்வர் அவர்களை கேட்டுக்கொண்டார். சிறப்பான முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதையும், உணவு முறையாக, தரமாக வழங்கி பராமரிப்பதையும் பாராட்டியதோடு அனைவரின் பணியினையும் பாராட்டினார்.