கோவை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோவை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் இந்த மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சில நாட்கள் மழை பெய்த நிலையில் பின்னர் கடும் வெயில் அடித்து வந்தது.
இதனிடையே, கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, தென் சிரபுஞ்சி என்றிழைக்கப்படும் சின்னக்கல்லாரில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 192 மி.மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
மேலும், வால்பாறையில் நேற்று 83 மி.மீட்டர் மழையும் சோலையார் அணை பகுதியில் 74 மி.மீட்டர் மழையும், நீரார் அணையில் 125 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு மற்றும் சிற்றோடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அதேபோல, 165 அடி உயரமுள்ள சோலையார் அணையில் இன்று காலை நிலவரப்படி 68.29 அடி உயரம் வரை நீர் உள்ளது. அணைக்கு 601.85 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது நீர் வெளியேற்றம் இல்லை.
மேலும், தொடர் மழை காரணமாக வால்பாறை பகுதியில் குளிர் நிலவுகிறது. தேயிலை தோட்டங்களில் கடும் குளிரிலும் தொழிலாளர்கள் கம்பளி போர்த்தியபடி கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.