திருப்பூர்: திருப்பூரில் சோதனை சாவடியில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரியை துரத்திப் பிடிக்கச் சென்ற போலீசார் அந்த லாரி மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் சோதனை சாவடியில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரியை துரத்திப் பிடிக்கச் சென்ற போலீசார் அந்த லாரி மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் பிரபு (25). இவர் கடந்த 2018ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது காங்கேயம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு காங்கேயம் அடுத்த திட்டுபாறை பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

இதனிடையே, ஈரோடு மாவட்டம் நொய்யல் சோதனைச்சாவடியில் கன்டெய்னர் லாரி ஒன்று அங்கிருந்த பேரிகார்டுகள் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இதனை அடுத்து அங்கிருந்த போலீசார், திட்டுபாறை சோதனை சாவடிக்கு தகவல் அளித்தனர். இங்கு அந்த கண்டெய்னர் லாரியை மடக்கி பிடிக்க போலீசார் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி திட்டுபாறை சோதனை சாவடியில் நிற்காமல் சென்றது.

இதனையடுத்து, சோதனை சாவடியில் பணியில் இருந்த பிரபு தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு லாரியை மடக்கி பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனிடையே லாரி ஓட்டுனர் வேறு பாதையில் ஈரோடு நோக்கி சென்றார் ஆனால், காங்கேயம் பேட்ரோல் போலீசார் லாரியை துரத்தி வந்து, ஈரோடு மாவட்டம் ஓடாநிலை பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் ஓட்டுநர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன்(40) என்பதும், குடிபோதையில் அவர் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காங்கேயம் போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.