கோவை: கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் செம்மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் ராஜேந்திரன் என்பவர் மனு அளித்தார்.
கோவை: கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் செம்மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் ராஜேந்திரன் என்பவர் மனு அளித்தார்.
கோவை தடாகத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பல வருடங்களாகவே சட்டவிரோதமாக செம்மண் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாகவும் வனவிலங்குகளுக்குத் தொந்தரவு ஏற்படுகிறது என்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சமீபகாலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
அதேபோல, சட்டவிரோதமாக கனிம வளத்தை கொள்ளையடிக்கும் செங்கல் சூளை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் செம்மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் ராஜேந்திரன் என்பவர் மனு அளித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, வீரபாண்டி வருவாய் கிராமத்தில் தனக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் சட்டவிரோதமாக 50 அடி ஆழத்திற்கு செம்மண் தோண்டப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த ஜூன் 7-ம் தேதி தங்களுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களின் அறிவுறுத்தலின்படி, கனிமவளத்துறையின் இணை இயக்குனர், கோவை வடக்கு வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து செம்மண் திருடப்பட்டதை உறுதி செய்தனர்.
அதேபோல, செம்மண் திருடப்பட்ட இடத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால், தற்போது வரை இச்சம்பவம் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனிடையே, நேற்று முன்தினம் எனது இடத்தில் வீரபாண்டியைச் சேர்ந்த கிரிதரன் மற்றும் சோழியப்பனின் பெரிய மகன் பெரிய தம்பி (எ) நாகராஜன் ஆகியோர் ஒரு ஜேசிபி இயந்திரம் மற்றும் 4 டிப்பர் லாரிகளை கொண்டு முறைகேடாக செம்மண் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் இது குறித்து கேட்டபோது, "நாங்கள் அப்படித்தான் எடுப்போம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எங்களை எதுவும் செய்ய முடியாது" என்று மிரட்டுகிறார்கள்.
இவ்வாறு செம்மண் கொள்ளையடிக்கப் படுவதால் மழை காலங்களில் மண்சரிவு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.