கோவையில் 26 பேருக்கு கொரோனா தொற்று; துடியலூர் பகுதியிலுள்ள மதுரை கோனார் மெஸ்சில் 7 பேருக்கு தொற்று உறுதி
கோவை: கோவையில் 26 பேருக்கு இன்று, ஜூன் 27 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், துடியலூர் பகுதியிலுள்ள மதுரை கோனார் மெஸ்சை சேர்ந்த 7 பேருக்கு தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக, கோவை கே.கே.புதூர் பகுதியில் உள்ள காமராஜர் தெரு மற்றும் காளியப்பன் தெருவை சேர்ந்தவர்களுக்கு இன்றும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும், இவ்விரு தெருக்களில் வசித்து வரும், எட்டு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று, அப்பகுதியை சேர்ந்த நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சூலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 32 வயது ஆண், ஓலம்பஸ் பகுதியை சேர்ந்த 27 வயது ஆணிற்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அடுத்து, கோட்டூர் பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் குனியமுத்தூர் பகுதியை 65 வயது பெண்ணிற்கும், டவுன்ஹால் பகுதியை சேர்ந்த 32 வயது ஆணுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், குனியமுத்தூர் பகுதி, பி.கே நகரை சேர்ந்த 37 வயது ஆணிற்கும் இருகூரைசேர்ந்த 31 வயது இளைஞருக்கும், செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த 45 வயது பெண்ணிற்கும், எம்.ஜி.ஆர் மார்கெட் பகுதியை சேர்ந்த 46 வயது ஆண் மற்றும் இடையர்பாளையம்பகுதியை சேர்ந்த 52 வயது நபர் சரவணம்பட்டியை சேர்ந்த 50 வயது ஆண் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் 22 வயது பெண்ணிற்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
மாநில சுகாதார அறிக்கையின்படி, கோவை மாவட்டத்தில் இதுவரை 428 பேர் கொறோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் அதிகரித்து வரும் தொற்றால் மக்கள் அனைவரும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நோய் தடுப்பு விதிகளை மீறுவோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.