கோவை: கோவையில் கொரோனா சளி மாதிரி எடுப்பதற்கு தானியங்கி ரோபோ இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ள பொறியியல் பட்டதாரி இளைஞர் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
கோவை: கோவையில் கொரோனா சளி மாதிரி எடுப்பதற்கு தானியங்கி ரோபோ இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ள பொறியியல் பட்டதாரி இளைஞர் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
நாகபட்டினத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் கார்த்திக். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை வேடப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோபாட்டிக் புட் ட்ரே என்ற சிறியரக சக்கர ரோபோவை கண்டுபிடித்து இருந்தார்.
சுமார் 5 கிலோ முதல் 7 கிலோ வரையிலான பொருட்களை எடுத்து செல்லம் வகையில் ரோபாடிக் ஒன்றை வடிவமைத்து இருந்தவர் கொரோனா தொற்றில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்து, உணவு போன்றவற்றை கொண்டு சென்று கொடுப்பதற்கு இந்த சிறிய ரக ரோபோ உதவிகரமாக இருக்கும் என கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்க முற்பட்டார்.
ஆனால், அவரை சந்திக்க அனுமதி கிடைக்கப் பெறாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றவர் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்ட போது சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்கள் வாங்க ஏதுவாகவும் பணத்தை நேரிடையாக கையில் பெறுவதை தவிர்க்கவும் செயல்முறை விளக்கம் செய்து காட்டியது சமூக வளை தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் பிரசுரமானது.
இதனை தொடர்ந்து, தற்போது கொரோனா சளி மாதிரி எடுப்பதற்கு தானியங்கி ரோபோ இயந்திரம் ஒன்றை வடிவமைத்து உள்ளார். இதனை இன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செயல் விளக்கம் செய்து காட்டி பொறியியல் இளைஞர் கார்த்திக் கூறுகையில், ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை சளி மாதிரி எடுக்க தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மனித ஆற்றலுக்கு மாற்றாக இந்த ரோபோடிக் இயந்திரம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதனை செயல்படுத்த செல்போன் செயலின் மூலம் இணையம் வாயிலாக இந்த ரோபோ இயந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் தாமதமின்றி துரிதமாக இரண்டு நிமிடத்தில் பரிசோதனை செய்ய முடியும் என்றார். மேலும் சளி மாதிரிகள் பல்வேறு நபர்களுக்கு பரிசோதனை எடுக்கப்பட வேண்டிய நிலை உள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இந்த இயந்திரம் தானியங்கி முறையில் சுத்தம் செய்து கொள்ளவும் சளி மாதரி எடுப்பவர்கள் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், 360 டிகிரி முறையில் இந்த இயந்திரத்தை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்த அவர், இதற்கு கோவிட் -19 ஸ்மார்ட் ஸ்வாப் என பெயரிட்டு உள்ளதாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரோபோட்டிக் இயந்திரம் செமி ஆட்டோமேட்டிக் வகையில் வடிவமைத்து உள்ளதாகவும் முழு ஆட்டோமேட்டிக் இயந்திரம் வடிவமைக்க அரசு உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்தியாவில் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக கூறிய கார்த்திக், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவர்களுக்கு அரசு உதவி தொகை வழங்கி ஊக்கமளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.