கோவை: நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் அங்கு பூட்டி இருந்த 6 வீடுகளின் கதவுகளை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் அங்கு பூட்டி இருந்த 6 வீடுகளின் கதவுகளை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு தென்றல் நகரில் 3 வீதிகள் உள்ளது. இங்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பலரது வீடுகள் உள்ள நிலையில், சிலர் இதனை கெஸ்ட் ஹவுசாக உபயோகித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கோவையில் இருந்து பலர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்ட நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் தென்றல் நகர் 3-வது வீதியில் சுகாதாரத்துறையில் பணியாற்றும் முரளிதரன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றவர்கள் பீரோவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து, தென்றல் நகர் 1-வது வீதியில் உள்ள ஊட்டி விவசாயி லிங்கராஜ், சுகுமாரன் மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த முருகேஷ், நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கோபிகண்ணன் ஆகியோரது வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு முயற்சியில் ஈடுபட்ட வீடுகளின் உரிமையாளர்கள் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தங்களது சொந்த ஊருக்கு சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், திருட வந்த நபர்களுக்கு எந்த வீட்டிலும் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதே பகுதியில் ஒரு வீட்டில் மட்டும் ரூ.500 பணத்தை கொள்ளையர்கள் திருடியுள்ளனர். இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் பரவியதை தொடர்ந்து, பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயலவே திருடர்கள் இருவரும் அருகிலுள்ள தோட்டத்திற்குள் புகுந்து தப்பி விட்டனர்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, 2 நபர்கள் கையில் அரிவாளுடன் சுற்றி வருவது பதிவாகி உள்ளது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.