கோவை: சாத்தான் குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என கோவை மாவட்ட வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: சாத்தான் குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என கோவை மாவட்ட வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை சிவானந்தா காலனியில் அமைந்துள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மண்டல தலைவர் சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், தூத்துக்குடி சாத்தன்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர்களான தந்தை, மகன் இருவரும் சிறையில் உயிரிழந்த சம்பவம் கண்டனத்திற்கு உரியது என தெரிவித்தார். போலீசார் விசாரணை என்ற பெயரில் இருவரையும் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதில் தான் இந்த மரணம் ஏற்பட்டதாகவும் மனிதாபிமானமற்ற முறையில் போலீசார் நடந்து கொண்டதாக தெரிவித்த அவர், போலீசாரின் தாக்குதல் காரணமாகவே சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் மரணமடைந்தனர் என குற்றம் சாட்டினார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டும் எனவும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேபோல, நாளைய தினம் நடைபெறவுள்ள உடற்கூறு ஆய்வு அறிக்கையில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகும் பட்சத்தில் கொலை குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என டி.ஜி.பி கூறி உள்ளதாகவும் உடற்கூறு ஆய்வு செய்யும் போது அரசு மருத்துவர்களுடன் வணிக தரப்பினர் இருக்க வேண்டும் எனவும் நீதிபதி முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், வணிகர் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.