கோவை: கோவையில் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைப்பதுடன், முகக்கவசம் அணியாமல் வெளியில் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க அலுவலர்களுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவையில் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைப்பதுடன், முகக்கவசம் அணியாமல் வெளியில் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க அலுவலர்களுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனோ தடுப்பு தொடர்பான அனைத்து அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்தியாவிலேயே அதிக அளவில் கொரோனா தொற்று பரிசோதனை செய்துவரும் மாநிலம் தமிழ்நாடு என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை மூலம் 2094 தனிமைபடுத்தப்பட்ட படுக்கை வசதிகளும், 387 செயற்கை சுவாசக்கருவிகளும் தயார் நிலையில் உள்ளது.
இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 149 மருத்துவர்கள், 112 செவிலியர்கள் மற்றும் 621 இதர பணியாளர்கள் என 882 பேர் மூன்று குழுக்களாக அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
அதேபோல, வெளிநாடுகள், வெளிமாநிலம்/மாவட்டங்கள் என வருபவர்களை விமான நிலைய சோதனைச்சாவடிகளில் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு புதிய தொற்றுக்கள் உருவாகாத வகையில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கோவை மாவட்டத்தில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 211 பேராக உயர்ந்துள்ள நிலையில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் எனவும் 48 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். குறிப்பிட்ட விதிகளுடன் மண்டலங்களுக்கு பொது போக்குவரத்து இயக்கப்பட்டு வருவதாகவும் கோவை மாவட்டத்திற்குள் அனுமதி பெற்று வருபவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், விமானம் மூலம் வருபவர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கிற்குப் பின் 89 விமானங்கள் வந்துள்ளதாகவும் இதில் 10,929 பயணிகள் வந்துள்ள நிலையில் 63 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
அதேபோல, கோவை மாவட்டத்தில் இதுவரை 28,380 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 17,938 பேர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பொது வெளியில் வரும் போது கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அவ்வாறு அணியாமல் வருபவர்கள் மீது அபராதம் விதிக்கவும், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்க அலுவலர்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.