கோவை: என்டிசி பஞ்சாலை தொழிலாளர்கள் சம்பள பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது. வரும் ஜூன் 25ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும் என நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
கோவை: என்டிசி பஞ்சாலை தொழிலாளர்கள் சம்பள பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது. வரும் ஜூன் 25ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும் என நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
என்டிசி பஞ்சாலை தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் ஆலைகளை இயக்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. தொழிலாளர்களுக்கான நிலுவை ஊதியம் ஜூன் 25ம் தேதிக்குள் வழங்கப்படும் என என்டிசி நிர்வாகம் உறுதியளித்து உள்ளது.
கொரோனா தொற்று நோய் பரவலை தொடர்ந்து, என்.டி.சி. ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்காமல் பாதி சம்பளமாக வழங்க முடிவு செய்தது. இதற்கு தொழிலாளர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முழு ஊதியம் வழங்கிட வேண்டும், ஆலைகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதில் மே மாத சம்பளத்தை 17ம் தேதி வரை முழு சம்பளமும், 18ம் தேதி முதல் மீதி நாட்களுக்கு அரை சம்பளமும் வழங்குவது என நிர்வாகத் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், ஒப்பந்தப்படி இதுவரை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை நிர்வாகம் வழங்காததையடுத்து, கடந்த 17ம் தேதி கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் தொழிற்சங்க தலைவர்கள், தொழிலாளர்கள் என்டிசி தலைமையகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது, இல்லையேல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சித்தலைவருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், என்டிசி நிர்வாகத்தின் தரப்பில் மேலாளர்கள் ராஜேந்திரகுமார், வெங்கடேஷ், சுதாகர் ஆகியோரும் தொழிற்சங்க தரப்பில் எல்.பி.எப் பார்த்தசாரதி, ஐஎன்டியுசி சீனிவாசன், சிஐடியு சேவியர், ஏடிபி கோபால், ஏஐடியுசி ஆறுமுகம், எச்.எம்.எஸ். ராஜாமணி, எம்.எல்.எப். தியாகராஜன், என்.டி.எல்.எப். ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், என்டிசி தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் ஆலைகளை இயக்குவது குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது எனவும் இதில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஊதியத்தை வருகிற 25ம் தேதிக்குள் கொடுப்பது என்றும் தமிழகத்தில் உள்ள என்டிசி பஞ்சாலைகளை படிப்படியாக இயக்குவது என மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையை ஏற்று என்டிசி நிர்வாகம் இதனை நடைமுறைப்படுத்துகிறோம் என உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவேறியதாக அவர் கூறினார்.