கோவை: கோவையில் ஆர்.ஜி.புதூரை சேர்ந்த இளைஞர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில், அப்பகுதி நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் ஆர்.ஜி.புதூரை சேர்ந்த இளைஞர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில், அப்பகுதி நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அதேபோல, கொரோனா தொற்று அதிகம் உறுதி செய்யப்பட்டுள்ள டெல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவை வருபவர்கள் அதிகரித்துள்ளதால் கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனிடையே, கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் ராமர் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் கடந்த 13ம் தேதி சென்னையில் இருந்து கோவை வந்தார்.
இவருக்கு 14ம் தேதி கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், ஆர்.ஜி.புதூரை சேர்ந்த இளைஞருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 6 பேருக்கு நேற்று முன்தினம் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதேபோல, நேற்றைய தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் இறந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த, அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இறந்த இளைஞருடன் சேர்த்து அப்பகுதியில் மட்டும் 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அப்பகுதி முழுவதும் நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளது.
மேலும், இறந்த இளைஞர் வசித்து வந்த வீட்டின் அருகில் இருக்கும், மற்ற குடியிருப்பு மக்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல, அப்பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அந்த பகுதியில் வசிக்கும் அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.