கோவை: கோவையில் டி-1, ராமநாதபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த நான்கு குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவையில் டி-1, ராமநாதபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த நான்கு குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட ராமநாதபுரம் காவல் எல்லையில் உள்ள புலியகுளம் பகுதியில் நடைபெற்று வரும் தொடர் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர்.
தொடர் குற்றங்களில் - அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்தனர்.
இப்படி கடந்த ஆறு மாதத்தில் மட்டும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மேலும் 4 பேரை குண்டர் தடுப்பு காவலில் வைக்க மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான மாநகர காவல் துறையின் பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
கோவை டி-1,இராமநாதபுரம் காவல் எல்லையில் உள்ள புலியகுளம் துள்ளா ஆறுமுகம் வீதியில் வசித்து விஷ்னு என்பவரை கடந்த மாதம் எட்டாம் தேதியும், சார்லஸ் ஸ்ரீராம் (21), உதய்விக்ரம் (20), ஜாக்கி என்ற பிரதீப் (23), உத்திரமணிகண்டன் (20) ஆகிய 4 பேரும் கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
அதேபோல, அவரது நண்பர்களான அஜித் குமார், ராஜேஷ் என்பவர்களையும் அரிவாளால் காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதைதொடர்ந்து குற்றவாளிகளை ஒரே நாளில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஏற்கனவே இவர்கள் மீது கஞ்சா விற்பனை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதால் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன், உதவி ஆணையாளர் செட்ரிக் மனுவேல் ஆகியோர் பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், குற்றவாளிகள் 4 பேரையும் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதுபோன்ற தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.