கோவை: கோவை மதுக்கரை அருகே செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை மதுக்கரை அருகே செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மதுக்கரை காவல் நிலைய சரகம் அறிவொளி நகர் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன் (35). கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பிரகாஷின் மனைவி சுமதி என்பவருக்கும் இடையே இடம் தொடர்பாக பிரச்சனை இருந்து இருந்து வந்துள்ளது.
கடந்த 2016ல், சுமதி மேற்படி மணிகண்டன் மீது கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் சுமதி தனது வீட்டில் சிசிடிவி கேமரா ஒன்றை பொருத்தி உள்ளார். கேமரா பொருத்தியதால் தனது குடும்பத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாகவும், இயற்கை உபாதைக்கு சென்றால் கேமராவில் பதிவாகும் என்று மணிகண்டன் தெரிவித்த காரணத்தால், இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று மணிகண்டன் அம்பேத்கர் சதுக்கத்தில் உள்ள ஏர்டெல் டவரில் ஏறி நின்று சுமதி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டல் விடுத்து உள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மதுக்கரை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மணிகண்டனை சமாதானம் பேசி அவரை கீழே இறக்கி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டிய நபரின் செயலால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.