கோவை: கோவையில் கடந்த இரு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் கடந்த இரு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் ரயில்வே கேட் பகுதியில் அருகில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்த்தபோது கிணற்றில் ஆண் சடலம் மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞர், கோவை சிங்காநல்லூர் சி.எம்.சி. காலனி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அருண்குமார் என்பதும் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.
அருண்குமார் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் பெற்றோர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். ஒரு நாள் கடந்தும் மகன் வராததாலும் அவர் குறித்த எந்த தகவலும் இல்லாததால் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டது, காணாமல் போன அருண்குமார் தான் என்பதை உறுதி செய்தனர். சடலமாக கண்டெடுக்கப்பட்ட கிணற்றின் அருகில் அருண்குமார் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அருண்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மதுபோதையில் கால் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.