திருப்பூர்: தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் தடுப்பதாக வார்டு உறுப்பினர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் தடுப்பதாக வார்டு உறுப்பினர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு உட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செல்வி. இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதே ஊராட்சி பகுதியில் ஆறாவது வார்டு உறுப்பினராக உள்ள குப்புசாமி என்பவர் பணி செய்ய விடாமல் தடுப்பது, ஊரடங்கு சமயத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என குற்றம்சாட்டி ஊராட்சிமன்ற தலைவர் செல்வியை ஜாதியின் பெயரைச் சொல்லி தரக்குறைவாக பேசியதோடு தாக்க முயற்சித்ததாக செல்வி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், ஒரு மாத காலமாகியும் குப்புசாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க தலித் கூட்டமைப்பினருடன் வந்திருந்தார். மக்கள் பணி செய்ய வேண்டிய தமக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்குவதோடு சாதியின் பெயரை சொல்லி தரக்குறைவாக பேசி தாக்க முயற்சித்த குப்புசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.