கோவை: கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு கூடுதல் ரயில் இயக்கிட வலியுறுத்தி சிஐடியு தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு கூடுதல் ரயில் இயக்கிட வலியுறுத்தி சிஐடியு தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொரோனா தொற்று காரணமாக உணவு, இருப்பிடமின்றி தவிக்கும் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிட கூடுதல் ரயில்களை இயக்கிட வலியுறுத்தி கோவையில் சிஐடியு தலைமையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கருப்பு கொடியேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டிடம், தையல், தங்கநகை மற்றும் பாணி பூரி விற்பனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வேலையின்றி கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
வருவாய் இல்லாததால் வாடகையில் குடியிருக்கும் வீட்டையும் காலி செய்ய வீட்டின் உரிமையாளர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தொண்டு நிறுவனங்கள் கொடுக்கும் உணவுகளை அருந்தியும், சாலையில் படுத்துறங்கியும் நாட்களை நகர்த்தி வருகின்றனர். இதன் காரணமாக தங்களின் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் இத்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பல்வேறு நிர்ப்பந்தங்களுக்கிடையே தமிழக அரசு மூன்றாவது கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில், சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வடமாநிலத்திற்கு அனுப்பி வருகின்றனர். கோவையில் இத்தொழிலாளர்கள் இருக்கிற எண்ணிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரயில்களின் எண்ணிக்கையும் போதுமானதாக இல்லை எனவும் தமிழக அரசு கூடுதலான ரயில் சேவையை வழங்க வலியுறுத்தி கோவையில் சிஐடியு தலைமையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காந்திபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோருடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.