20 பேருக்கு குறையாமல் இருக்கும் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
20 பேருக்கு குறையாமல் இருக்கும் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தொகுத்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் வழங்கினர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், கோவையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் போன்றவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் கொடுக்கவில்லை. அட்வான்ஸ் தொகை மட்டுமே கொடுத்து இருக்கின்றனர். ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கல்வி நிறுவனங்களை திறக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ள நிலையில், கல்வி கட்டணத்தை கட்ட நிர்பந்திகின்றனர் எனவும், கல்வி கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார். இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை அழைத்து அறிவுரை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இரு நாட்களாக புலம் பெயர் தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என கூட்டம் கூட்டமாக வந்து கொண்டு இருக்கின்றனர் எனவும் கோவை மாவட்டத்திற்கு உழைத்த வெளிமாநில தொழிலாளர்களை மரியாதையோடு அவர்களின் ஊருக்கு அனுப்பி வைக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொழிலாளிகள் இல்லை என்றால் தொழில் பிரச்சினை ஏற்படும் என சொல்லும் முதலாளிகள், அவர்களை முறையாக பராமரிக்க வேண்டும் என கூறிய அவர், தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பும் நிர்வாக நடைமுறையில் கோளாறு இருக்கின்றது எனவும், அதை சரிப்படுத்திப் பலப்படுத்த வேண்டும் எனவும், அப்போது தான் வெளிமாநில தொழிலாளர்கள் சாலைக்கு வருவதை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.
கோவையில் இருக்க விரும்பும் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு, பணியில்லாத நேரத்தில் அவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும், ஆதார் கார்டு அடிப்படையில் 1000 ரூபாய் அவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஆட்டோ, கட்டிட தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஏராளமான தொகை இருக்கின்றது எனவும், நலவாரிய உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கொண்டு வந்து சேர்க்கும் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க விவசாயிகளை அழைத்து அவர்களின் பிரச்சினைகளை கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதேபோல, மாற்று திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கான உதவி தொகை கிடைப்பதையும் உறுதி செய்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கொரோனா இல்லாத மாவட்டமாக கோவை வந்திருப்பது மகிழ்ச்சி என கூறிய அவர், கோவை மாவட்டத்தில் தினம் எவ்வளவு சோதனைகள் எடுக்கப்படுகின்றது என்பதை மாவட்ட நிர்வாகம் தெரியபடுத்த வேண்டும் என தெரிவித்தார். எதை வைத்து கொரோனா தொற்று இல்லை என்று எந்த அடிப்படையில் அறிவிக்கின்றீர்கள் என்பதை மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் மாவட்ட அமைச்சரும், ஆட்சித்தலைவரும் தொற்று இல்லை என முதுகு தட்டிக்கொள்ளுவது நம்மை நாமே ஏமாற்றுவதை போன்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், 20 பேருக்கு குறையாமல் இருக்கும் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட வேண்டும் எனவும் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார்.