கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் இயங்கிவரும் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் தலித் மாணவியை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து துன்புறுத்திய அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாணவியின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணியிடம் இன்று மனு அளித்தனர்.

இதுகுறித்து பேசிய சிறுமியின் தாய் மகேஸ்வரி கூறுகையில், 'எனது மூத்த மகள் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக எனது மகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் அழுதபடியே உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் அவளிடம் விசாரித்த போது, பிப்ரவரி 11ம் தேதி பள்ளியில் உள்ள கழிவறையை தலைமை ஆசிரியர் குமரேஸ்வரி சுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும், கடந்த இரண்டு வாரங்களாக கழிவறையை சுத்தம் செய்து வருவதாக தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, தானும் பெற்றோர்கள் சிலரும் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்ததாகவும் ஆனால், அதற்கு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என என்றார். மேலும், இந்த ஆசிரியர் தனது மகள் உட்பட பலரை சாதி ரீதியாக திட்டியுள்ளதாக கூறிய அவர், தனது மகளை மற்றவர்கள் சாப்பிட்ட தட்டுகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாகவும் இதனால் தனது மகள் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும் சாதியின் பெயரால் அவமானப்படுத்திய தலைமை ஆசிரியை குமரேஸ்வரி மீது பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளதாக கூறினார்.