கோவை: கோவையில் நகை கடைகள் மற்றும் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த மூன்று மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் நகை கடைகள் மற்றும் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த மூன்று மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை டவுன்ஹால் மற்றும் பெரிய கடைவீதி பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட சில்லரை வியாபார நகைக்கடைகள் உள்ளன. அதேபோல 300க்கும் மேற்பட்ட மொத்த வியாபார கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனைகள் மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று கோவை பெரியகடை வீதி பகுதியில் உள்ள ஸ்ரீ வாசவி செயின்ஸ் என்ற நகை கடையில் திடீரென உள்ளே சென்ற 6 பேர் கொண்ட வருமானவரித் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல காந்திபார்க் பகுதியிலுள்ள நகைக்கடையின் உரிமையாளர் பாலமுருகனின் வீட்டிலும் ஆறு பேர் கொண்ட குழுவினர் அதே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான கந்தா சில்வர்ஸ் என்ற மொத்த வியாபார கடையிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சோதனையானது கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மேலும் இவர்கள் பணமதிப்பிழப்பின் போது பல கோடி ரூபாய்களை வங்கிக்கணக்கில் பரிவர்த்தனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.