கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவங்கி வைத்தார்.
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவங்கி வைத்தார்.
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத பிரச்சினையை தடுக்கும் வகையில் அரசு சார்பில் சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அரசு அறிவித்த படி தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இதற்கான முகமானது இன்று காலை 7 மணிக்கு துவங்கியது தொடர்ந்து மாலை 5 மணிக்கு நிறைவடையவுள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவமனையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சொட்டு மருந்து முகாமை துவங்கி வைத்தார். மேலும் அவருடன் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி , மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஜெயசித்ராவினை, அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது ;- “சென்ற ஆண்டு 3.33 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.இந்த ஆண்டு 3.34 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கோவைமாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1202 மையங்களும், நகர்ப்புறங்களில் 379 மையங்களும் என மொத்தம் 1581 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 30 மையங்கள் மற்றும் 18 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் போலியோ சொட்டுமருந்து வழங்கும் பணியில் 6536 பேர் ஈடுபட்டுள்ளனர்.அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது.
அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.”