கோவை: சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் மக்களிடம் சென்றடைந்து உள்ளதாகவும் புதிதாக வர்ம கலை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஏராளமானோர் வர்ம சிகிச்சை மேற்கொள்வதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் தெரிவித்தார்.
கோவை: சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் மக்களிடம் சென்றடைந்து உள்ளதாகவும் புதிதாக வர்ம கலை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஏராளமானோர் வர்ம சிகிச்சை மேற்கொள்வதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் தெரிவித்தார்.
மூன்றாவது தேசிய சித்த மருத்துவ ஆயுஷ் முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அகத்தியர் பிறந்த தினமாக 13ம் தேதியை முன்னிட்டு சித்த மருத்துவத்தின் நன்மைகள் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

இலவச சித்த மருத்துவ முகாம், மூலிகைகள் மற்றும் மருந்து மூலப் பொருட்களின் கண்காட்சி இதில் இடம் பெற்று இருந்தன.
இந்த முகாம் குறித்து மாவட்ட சித்த மருத்துவர் தனம் கூறுகையில், மாவட்டத்தில் 75 சித்த மருத்துவமனைகள் இயங்கி வருவதாகவும் சித்த மருத்துவம் குறித்து தற்போது அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு பலர் சித்த மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். புதிதாக வர்ம கலை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஏராளமானோர் வர்ம சிகிச்சை மேற்கொள்கின்றனர் என தெரிவித்த அவர், அம்மா மகப்பேறு திட்டம் நல்ல முறையில் செயல்படுவதாகவும் இதில் கருத்தரித்த காலத்தில் இருந்து மகப்பேறு வரை தேவையான அனைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இலவசமாக ஊட்டசத்து மருந்துகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், அறுவை சிகிச்சை தவிர்த்து சுகப்பிரசவம் வரை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு செய்வதாகவும் அப்போது தெரிவித்தார். இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மூலிகை செடிகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும், முகாமிற்கு வந்தவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் இலவசமாக வழங்கப்பட்டது. காலை முதல் நடைபெற்று வரும் இந்த மருத்துவ முகாமிற்கு ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.