நாட்டிலேயே நிர்வாகத் திறனில் தமிழகம் 5.62 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளதாக தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி மத்திய நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டிலேயே நிர்வாகத் திறனில் தமிழகம் 5.62 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளதாக தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி மத்திய நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி தேசிய நல்லாட்சி தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறப்பான நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள் எவை எவை என்று மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. 18 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 11 வடகிழக்கு மற்றும் மலை பகுதி மாநிலங்கள் என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. விவசாயம், தொழில் ஆகியவையும் இந்தக் கணக்கெடுப்பில் ஆய்வு செய்யப்பட்டன. இதனையடுத்து தேசிய அளவில் சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட மாநிலங்களின் குறியீட்டுப் பட்டியலை மத்திய நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டது.
அதில், ஒட்டுமொத்த பிரிவில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த பிரிவில் மகாராஷ்டிரா இரண்டாம் இடம், 3வது இடத்தில் கர்நாடகா, 4வது இடத்தில் சத்தீஸ்கர், 5வது இடத்தில் ஆந்திரா, 6வது இடத்தில் குஜராத், 7வது இடத்தில் ஹரியானா, 8வது இடத்தில் கேரளா 9வது இடத்தில் மத்திய பிரதேச, 10வது இடத்தில் மே.வங்கம், 11வது இடத்தில் தெலுங்கானா, 12வது இடத்தில் ராஜஸ்தான், 13வது இடத்தில் பஞ்சாப், 14வது இடத்தில் ஒடிசாவும், 15வது இடத்தில் பீகார், 16வது இடத்தில் கோவா, 17வது இடத்தில் உ.பி., 18வது இடத்தில் ஜார்க்கண்ட் உள்ளன.
மேலும், பொது மக்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம், முதலிடத்தையும், பொது சுகாதாரத்துறையில் 2வது இடத்தையும், சுற்றுச்சூழலில் 3வது இடத்தையும், வேளாண்மையில் 9வது இடத்தையும், வணிகத்தில் 14வது இடத்தையும், மனித வள மேம்பாட்டில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. பெரிய மாநிலங்கள் பட்டியலில், பொருளாதார துறையில் 5வது இடத்தையும், நீதி, சட்டம் ஒழுங்கு, பொது மக்கள் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும், நல்லாட்சி நடக்கும் மாநிலங்களிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.