கோவை: டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திற்குள் புகுந்த மிரட்டல் விடுத்த நபர்களை கண்டித்து கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திற்குள் புகுந்த மிரட்டல் விடுத்த நபர்களை கண்டித்து கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற மன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வருகை பதிவு குறித்து நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் செய்தி வெளியானது. அதில் பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மிக குறைவான நாட்கள் மட்டும் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் சிலர் நேற்று சென்னை டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்றம் செய்தி குறிப்பு வெளியிட்டதன் அடிப்படையில் செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்தில் நுழைந்து மிரட்டல் விடுத்ததை கண்டித்து கோவை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கருத்து சுதந்திரத்திற்கு மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது, தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், பத்திரிகையாளர் பாதுகாப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்ட பல்வேறு ஊடகங்களில் பணிபுரிபவர்கள் கலந்து கொண்டனர்.