கோவை: கோவையில் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம், சங்கர் நகர் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் தீண்டாமை கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் தீண்டாமை சுவற்றினால் 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கைது செய்யப்பட்ட தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன் நிபந்தனைகளின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல தாழ்த்தப்பட்ட இந்துக்களின் மீது நடைபெறும் தீண்டாமை தொடர்பாக புகார் கொடுத்தால், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை அதை விடுத்து புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அவலங்களும் நடைபெறுவதாகவும், இப்படி தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு நடைபெறும் அவலங்களை சரி செய்ய வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தமிழ்ப் புலிகள் கட்சியின் குடும்பத்தினர் சுமார் 3000 பேர் இந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாம் மதம் தழுவுவதென தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்புலிகள் கட்சியின் பொதுசெயலாளர் இளவேனில் கூறும் போது:-
மேற்கு மாவட்டங்களில் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது.
காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க சென்றால் வழக்குபதிவு செய்வதில்ல்லை. உரிய மரியாதையும் கிடைப்பதில்லை. போராட்டங்கள் நடத்தி தான் வழக்கு பதிவுகள் நடைபெறுகிறது.
அப்படியே வழக்கு பதிவு செய்தாலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை. நீதிமன்றங்களிலும் உரிய நீதி கிடைப்பதில்லை.
இதுபோன்ற தொடரும் அவலங்களால் வேறு வழி இன்றி நாங்கள் இந்து மதத்திலிருந்து மூன்றாயிரம் பேர் இஸ்லாம் மதத்தை தழுவ உள்ளோம், என தெரிவித்தார்.