கோவை: கோவை மாவட்டத்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 12ம் ஆண்டு கோவை விழா வரும் ஜனவரி 3ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
கோவை: கோவை மாவட்டத்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 12ம் ஆண்டு கோவை விழாவானது வரும் ஜனவரி 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
கோவை விழா கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், 12ம் ஆண்டு விழா ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முன்னோட்டக் கூட்டம் மாநகராட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கப்பற்படையின் கமாண்டிங் அதிகாரி அசோக் ராய் முன்னோட்ட நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். இதனை தொடர்ந்து, கோவை விழாவின் தொடக்கம் முதல் நிறைவடையும் நாள் வரை அன்றாடம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பேசும்போது, இந்த ஆண்டு கோவை விழாவில் நான் முதன் முறையாக கலந்து கொள்ள இருக்கிறேன். நாடே திரும்பிப்பாா்க்கும் விதமாக இந்த விழாவை கோலகலமாக கொண்டாட வேண்டும் என்றார். இந்த முன்னோட்ட நிகழ்ச்சியில், யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் பிரவீன்குமார், கோவை விழாவின் தலைவர் சுப்புராஜ் வெங்கட், துணைத் தலைவர் அபிலாஷா, கோவையை சேர்ந்த தொழில் முனைவோர், விழா நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு கோவை விழா இசை நிகழ்ச்சிகளுடன் ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 5ம் தேதி மாரத்தான், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜனவரி 10 முதல் 12ம் தேதி வரை கோவையின் முக்கிய உணவகங்கள் ஒரே இடத்தில் உணவு பரிமாறும் உணவுத் திருவிழா கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது.

மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான கலைத் தெரு ஜனவரி 11, 12ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நாள்களில், கலைத்தெரு நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், தொழில்முனைவோருக்கான அடித்தளமாக ’தி பிட்ச்’ என்ற பெயரில் முதலீடுகளை திரட்டும் நிகழ்ச்சி, பழமையான காா், பைக் கண்காட்சிகளும் நடைபெறுகின்றன. இதைத் தவிர பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களின் சார்பில் மாநகரில் ஆங்காங்கே கோவை விழா என்ற அடையாளத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுகின்றன.