கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு காரணமான சக்கரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை. திருவள்ளுவன் உள்ளிட்டோரை காவல் துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர்.
இந்நிலையில், நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோரை தாக்கிய காவல் துறையினரை கண்டித்தும், 17 பேர் உயிரிழக்க காரணமான சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக, விசிக,மே 17 இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.17 பேர் உயிரிழக்க காரணமான சுவர் தீண்டாமை சுவர் எனவும், இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததே உயிரிழப்புகளுக்கு காரணம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் இழப்பீடு, அரசு வேலை மற்றும் புதிய வீடுகள் கட்டி தர வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.