கோவை: வால்பாறையில் உள்ள அய்யர்பாடி பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: வால்பாறையில் உள்ள அய்யர்பாடி பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அய்யர்பாடியில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏ.டி.,எம் மையத்தில் கடந்த 20ம் தேதி காலையில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி பதிவுகளை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், வால்பாறையிலுள்ள கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதை உளவுப்பிரிவு காவல்துறையினர் கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் சுற்றி வளைத்து அங்கு பதுங்கி இருந்த பொள்ளாச்சி நெகமம் பகுதியைச்சேர்ந்த ராமசாமி மகன் கோபால்சாமி மற்றும் வால்பாறை அய்யர்பாடி ஜே.இ.பங்களா பகுதியைச்சேர்ந்த ராஜா ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளை சம்பவம் நடைபெற்ற 2 தினங்களில் கண்டு பிடித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.