திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் மாநகராட்சியின் குப்பைக்கிடங்கால் சுகாதார சீர்கேடு நிலவி தொற்றுநோய் பரவுவதாகக் கூறி பொதுமக்கள் மாஸ்க் அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் மாநகராட்சியின் குப்பைக்கிடங்கால் சுகாதார சீர்கேடு நிலவி தொற்றுநோய் பரவுவதாகக் கூறி பொதுமக்கள் மாஸ்க் அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 19வது வார்டு பகுதியில் மும்மூர்த்தி நகர், கருப்பராயன் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்புக்கு மத்தியில் மாநகராட்சி சார்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குப்பை கிடங்கு நிரந்தரமாக அந்த இடத்திலேயே அமைக்கப்பட்டுவிட்டதாகவும் அதனால் சுற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதால் குப்பைக்கிடங்கினை இடமாற்றக்கோரி பலமுறை மாநகராட்சியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பலனில்லாததால், வடக்கு வட்டாட்சியரை வரவழைத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.