கோவை: கோவையில் அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததே காரணம் என்றும் அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை கோல்ட்வின்ஸ் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண் திடீரென அதிமுக கொடிக்கம்பம் விழுவதைக் கண்டு வாகனத்தை நிறுத்த முற்பட்டதில் விபத்துக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்ற அனுராதா(30). இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று பணிக்கு செல்வதற்காக, அனுராதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், அப்போது கோல்டுவின்ஸ் அருகே செல்லும்போது, அதிமுக கொடி கம்பம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. அதை கண்ட அவர் உடனடியாக இருசக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது, அந்த வழியே வந்த லாரி அனுராதாவின் கால் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த இளம்பெண்ணை அருகே இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து, பீளமேடு போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அனுராதா என்பவர் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததே காரணம் என்றும் அதனை காவல்துறையினர் மறைப்பதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக-வினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது? என கேள்வி எழுப்பியுள்ளார்.