கேரளாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கேரள அரசின் கே போன் திட்டம் என்பது அரசு சார்பில் ஆப்டிக் பைபர் கேபிள் மூலம் மாநிலம் எங்கும் இணைய வசதி வழங்கும் திட்டமாகும். இந்த திட்டம் கேரள மாநில தொழில் நிதி ஆணையத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநிலம் எங்கும் ஆப்டிக் “பைபர் கேபிளை நிறுவ கேரள மின்சார வாரியம் மற்றும் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் கேரள தொழில்நுட்பத் துறை மூலம் இணைப்பு வழங்கப்பட்டது.
இந்த கேபிள்கள் மூலம் இணைய சேவை வழங்குவோர் மற்றும் கேபிள் டிவி சேவை வழங்குவோர் இணைந்து வீடுகளுக்குச் சேவை வசதியை அளிக்க உள்ளனர். இதன் மூலம் மாநிலம் எங்கும் அதிக வேகம் கொண்ட இணைய சேவையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மொபைல்
கோபுரங்களையும் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுதொடர்பாக ட்விட்டரில் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் வெளியிட்டுள்ள பதிவில், கேரளாவில் இணையதள இணைப்பு, அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 1,548 கோடி ரூபாய் மதிப்பில் கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் ஏற்படுத்த கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும், இதன்மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இணையதள வசதி இலவசமாக அளிக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டம், 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் எனவும் அந்தப் பதிவில் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.