கோவை: கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து இன்று (நவ., 4) விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தண்ணீரை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் மலர் தூவி திறந்து வைத்தார்.
கோவை: கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து இன்று (நவ., 4) விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தண்ணீரை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் மலர் தூவி திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், தமிழக முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தினை கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தியதன் விளைவாக, நகரப்பகுதிகள், ஊரக பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் என அனைத்தும் நீர் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் அதிகளவில் பயன்பெறும் வகையில் உள்ளது.
அதனடிப்படையில், பாசனப் பகுதிகளுக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி பரம்பிக் குளம் ஆழியாறு திட்ட ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் கோரியினை ஏற்று தமிழக முதலமைச்சர், ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட கடந்த நவம்பர் 2ம் தேதியன்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று (நவ., 4) முதல் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள பொள்ளாச்சி கால்வாய் “ஆ” மண்டலத்தில் 5621 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கும், ஆனைமலை வட்டத்தில் உள்ள பொள்ளாச்சிக் கால்வாய் “ஆ” மண்டலத்தில் 6321 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கும், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் “அ” மண்டலத்தில் 5558 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கும், சேத்துமடைக் கால்வாய் “ஆ” மண்டலத்தில் 2529 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கும், ஆழியார் ஊட்டுக் கால்வாய் “ஆ” மண்டலத்தில் 2303 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கும் என மொத்தம் 22332 ஏக்கர் பாசனப் பரப்புள்ள பூமிகளுக்கு 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு 70 நாட்களுக்கு மொத்தம் 2250 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், ஆழியாறு அணையிலிருந்து எலவக்கரை குளத்திற்கு, மொத்தம் 250 ஏக்கர் பாசனப் பரப்புள்ள பூமிகளுக்கு 11 நாட்களுக்கு 57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கமான பயன்படுத்தி, நீர் மேலாண்மையை மேற்கொண்டு அதிக அளவில் மகசூல் பெறவேண்டும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வருவாய் கோட்டாட்சியர்(பொள்ளாச்சி) ரவிக்குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் லீலா, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.