கோவை : பொதுமக்கள் மற்றும் சுற்று சூழல் பாதிக்காத வகையில் கோவையில் தொழில் துறையினர் வளர்ச்சி அடைய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார்.
கோவை : பொதுமக்கள் மற்றும் சுற்று சூழல் பாதிக்காத வகையில் கோவையில் தொழில் துறையினர் வளர்ச்சி அடைய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழில்கண்காட்சி வளாகத்தில் மாவட்ட தொழில்மையம் சார்பில் தொழில் துறையினர் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கலந்து கொண்டு தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிற் சங்க நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ராஜாமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- கோவை மாவட்டத்தில் தொழில் துறையினருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தொழில் துறையினரின் பிரச்சனைகளும் தீர்வு காணப்படுகிறது. தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள தொழில் கூடங்களினால் ஏற்படும் பிரச்சனைகள், அவற்றிற்கு உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநில அரசின் திட்டங்கள் சலுகைகள், மத்திய அரசின் முத்ரா திட்டம் என அனைத்து திட்டங்கள் மூலமும் 100 சதவீதம் தொழில் துறையினர் பயன் அடைந்து வருகின்றனர்.

ஏதோ ஒரு சிலர் சரியாக திட்டங்கள் கிடைக்கப்பெறவில்லை என்று கூறுகின்றனர். அவர்களுக்கு மாவட்ட தொழில்துறை மையம் மூலம் தீர்வு காணப்படும். மேலும், தொழிற்சாலைகளின் வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகை அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பணிகளுக்காக சட்டப்படி செலவிடப்படும். எனவே, கோவையில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்று சூழல் பாதிக்காத வகையில் தொழில் துறையினர் மேலும் வளர்ச்சி அடைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், எனக் கூறினார்.