கோவை : ஆனைகட்டி அருகே குடிபோதையில் இளைஞர்கள் ஓட்டி வந்த வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : ஆனைகட்டி அருகே குடிபோதையில் இளைஞர்கள் ஓட்டி வந்த வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைகட்டி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா கிராம சுகாதார மையம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், எதிரே வந்து மோதிய இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து நடந்த பகுதியின் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்திக் கொண்டு வந்த இரு இளைஞர்களினால், தற்போது ஒருவர் வாழ்வை இழந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், விபத்திற்கு காரணமான டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே, இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.