கோவை : அரசு பள்ளியில் மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியும், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தும் தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
கோவை : அரசு பள்ளியில் மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியும், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தும் தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு கந்தசாமி நகரில் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் லட்சுமணன் என்பவரின் மகள் திவ்யபாரதி நான்காம் வகுப்பும், மகன் பூபதி மூன்றாம் வகுப்பும், அதேபோல, அம்ஸ் கண்ணன் என்பவரின் மகள் வெண்ணிலா நான்காம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி பள்ளியில் இருந்த போது பள்ளியின் தலைமையாசிரியை ஜெயந்தி மாணவ, மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், பிரம்பால் அடித்ததில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறி பெற்றோர்கள் தலைமையாசிரியரை கண்டித்து அன்றே பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, தங்களது குழந்தைகளை தாழ்ந்த சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்யச்சொல்லி தலைமையாசிரியர் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், தலைமையாசிரியர் ஜெயந்தி தாழ்ந்த சாதியில் பிறந்தால் எங்கு நல்ல குணம் வரும், நல்ல சாதியில் பிறந்து இருந்தால், நல்ல குணம் வரும் என சாதிய ரீதியாக பேசியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். மேலும், தன்னுடைய கணவர் உயர்ந்த அதிகாரியிடம் வேலை செய்து வருவதால் ஒன்றும் செய்ய முடியாது என பெற்றோர்களை மிரட்டியுள்ளதாக தெரிகிறது. தலைமையாசிரியரின் இந்த சாதிய வெறியால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பயப்படுவதாகக் கூறினர்.
இந்த நிலையில், சாதிய ரீதியாக செயல்படும் தலைமையாசிரியர் ஜெயந்தி மீது துறை ரீதியாகவும், வேறு இடத்திற்கு பணி மாறுதல் கொடுக்காமல், பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
இது குறித்து பெற்றோர்கள் கூறும்போது :- இந்த ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியை இதேபோல தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்தப்பள்ளியில் சேர்க்காமல் சரவணம்பட்டியில் உள்ள பள்ளியில் சென்று சேர்த்துள்ளனர். மேலும், பள்ளி தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினர்.
ஏற்கனவே, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேசனிலும் வட்டார கல்வி அதிகாரியிடமும் புகார் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.