கோவை : அ.தி.மு.க. தலைமையின் அறிவுறுத்தலின் பேரில்,கோவை பேரூர் பட்டிஸ்வரர் கோவிலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் யாகம் நடத்தப்பட்டது.
கோவை : அ.தி.மு.க. தலைமையின் அறிவுறுத்தலின் பேரில்,கோவை பேரூர் பட்டிஸ்வரர் கோவிலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் யாகம் நடத்தப்பட்டது.
தமிழகத்தின் தலைநகரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்தாண்டு கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் மழை வேண்டி அனைத்து அமைச்சர்களும் அந்தந்த மாவட்டங்களில் இன்று யாகம் வளர்க்க அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக, கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கோவை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மழை பெய்ய வேண்டி வருண பகவானை கும்பிட்டு 40 வகையான தானியங்கள் வைத்து யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- ஜெயலலிதா அவர்களின் வழியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க பல விதமான திட்டங்களை செயல்படுத்தி வரப்படுகிறது. இந்த ஆண்டு மழை இல்லாத சூழலிலும், நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மழை பெய்ய வேண்டி இன்று அனைத்து மாவட்டங்களிலும் கோயில்களில் வருணா யாகம் நடத்த்கப்பட்டுள்ளது. யாகம் நடத்தியதால் கண்டிப்பாக மழை பெய்து மக்கள் பயனடைவார்கள். தண்ணீர் பிரச்சனை தொடர்பாக எதிர்கட்சி விமர்சனங்கள் குறித்து குற்றம் சொல்ல விரும்பவில்லை.
ஜோலார்பேட்டையிலிருந்து அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படாத வகையில், சென்னை வாழ் மக்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். ஜோலார்பேட்டையில் தண்ணீர் போதுமான அளவிற்கு இருக்கிறது. அதிகாரிகளின் ஆய்வின் அடிப்படையிலே அங்கிருந்து சென்னைக்கு நீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காவிரியில் இருந்து தண்ணீர் பெறும் விவகாரத்திலும் தான் எதிர்ப்பு உள்ளது. அங்கிருந்து தண்ணீர் வழங்குமாறு தமிழகம் கேட்கவில்லையா..?. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு புதிய திட்டங்கள் மூலம் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும், என அப்போது அவர் தெரிவித்தார்.

இதேபோல, கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன். அர்ஜூனன் ஆகியோர் மழை வேண்டி யாகம் நடத்தினர்.