கோவை : நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தி.மு.க. மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தி.மு.க. மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மும்மொழி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், கிராமப்புற மாணவர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும், இந்தி திணிப்பைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாடாபாத்தில் தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் புதிய கல்வி கொள்கையைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

போராட்டத்தின் போது, மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார் கூறுகையில், "நீட் தேர்வில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், புதிய கல்வி கொள்கையால் மாணவர்களின் சுமை அதிகரித்துள்ளது. மும்மொழி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால், தி.மு.க. தலைமையின் ஆலோசனையின் பேரில் போராட்டங்கள் தொடரும்," என கூறினார்.