கோவை : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியால் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட தி.மு.க. தொண்டர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியால் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட தி.மு.க. தொண்டர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் முறையாக குடிநீர் விநியோகத்தில் கவனம் செலுத்தாத அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 400 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் உக்கடம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதனிடையே, காலையில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டவர்கள் இரவு நேரமாகியும் தற்போது வரை விடுவிக்கப்படவில்லை. 8 மணி நேரத்திற்கும் மேலாகியும் எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட தி.மு.க. தொண்டர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எம்.எல்.ஏ. நா. கார்த்திக்கை சிம்ப்ளிசிட்டி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, "போலீசார் இதுவரை எங்களை விடுவிக்கவில்லை. இது பற்றி கேட்டால், மேலிடத்தில் இருந்து இன்னும் உத்தரவு வரவில்லை எனக் கூறுகின்றனர். ஆகவே, எங்களை சிறைவைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்," எனக் கூறினார்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் இரவு நேர உணவும் போலீசார் ஆர்டர் செய்திருப்பதால், தொடர்ந்து அவர்கள் சிறை வைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. இதனிடையே, கோட்டமேடு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டள்ளனர்.
கோவையில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கூறுகையில், "தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை இருக்கிறது. ஆனால், குடிநீர் பிரச்சினை இல்லை என அரசு பொய் சொல்கின்றது. அறவழி போராட்டம் நடத்திய எங்களை கைது செய்து வைத்துள்ளனர். இரவு உணவு இதுவரை வழங்கப்படவில்லை. குடிநீர் வழங்கப்பட வில்லை. வயதான பெண்களையும் உணவு கொடுக்காமல் அடைத்து வைத்திருக்கின்றனர். சர்க்கரை நோயாளிகளும் இருக்கின்றனர்.
மக்களுக்கு சீரான முறையில் குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும். அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம். குடிதண்ணீருக்காக தொடர்ந்து போராடுவோம். குடிநீர் பிரச்சினைக்காகப் போராடும் எங்களை கைது செய்தாலும், மக்களுக்காக அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம்," எனக் கூறினார்.