கோவை : சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர் மாணவ, மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டி அடித்ததாகவும், தகாத வார்த்தையால் பேசுவதாகவும் எழுந்த புகாரை அடுத்து பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை : சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர் மாணவ, மாணவிகளை சாதி பெயரை சொல்லி திட்டி அடித்ததாகவும், தகாத வார்த்தையால் பேசுவதாகவும் எழுந்த புகாரை அடுத்து பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு கந்தசாமி நகரில் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லட்சுமணன் என்பவரின் மகள் திவ்யபாரதி நான்காம் வகுப்பும், மகன் பூபதி மூன்றாம் வகுப்பும், அம்ஸ் கண்ணன் என்பவரின் மகள் வெண்ணிலா நான்காம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த மாணவர்கள் நேற்று பள்ளியின் தலைமையாசிரியை ஜெயந்தி, சாதி பெயரை சொல்லி திட்டியதாக அவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிரியை அடித்ததில் ஆன காயங்களையும் காண்பித்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும், இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது, "இந்த ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியை இதேபோல தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக, பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்க்காமல் சரவணம்பட்டியில் உள்ள பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். அதேபோல, உணவு உண்டதில் ஜீரணமாகாத குழந்தைகள் ஏதாவது வாந்தி எடுத்தால் மாசமாக இருக்கிறாயா..? என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்," என வேதனை தெரிவித்தனர்.
மேலும், ஒரு தலைமை ஆசிரியையே மாணவிகளிடம் தகாத அருவெறுப்பான வார்த்தைகளை சொல்லி திட்டுவது வேதனை அளிக்கிறது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுத்து இந்த பள்ளியைக் காப்பாற்ற வேண்டும் என சரவணம்பட்டி காவல் நிலையத்திலும், கல்வி அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளனர். ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் மாணவர்களிடம் சாதி ரீதியாகவும் ஒழுக்கமற்ற வார்த்தைகளை சொல்லி திட்டுவதும் தவறான உதாரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.