கோவை : கோவையில் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களை நீதிமன்ற அனுமதியுடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : கோவையில் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களை நீதிமன்ற அனுமதியுடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கடந்த 12ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை மற்றும் விசாரணைகளை மேற்கொண்டனர். இதில், உக்கடத்தை சேர்ந்த முகமது அசாருதீன் (32), போத்தனூர் திருமறை நகரைச் சேர்ந்த அக்ரம் ஜிந்தா (26), தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா (38), குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் (29), போத்தனூர் உமர் நகரை சேர்ந்த சதாம் உசேன் (26), தெற்கு உக்கடத்தை சேர்ந்த இப்ராஹிம் என்ற ஷாகிம்ஷா (28) ஆகிய 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு, தென் மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடத்த அந்த அமைப்புக்கு இளைஞர்களை திரட்டியதாகவும், அந்த அமைப்புக்காக நிதி திரட்டியதாகவும் முகமது அசாருதீனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
அதை தொடர்ந்து, மற்றொரு நபரான ஷேக் இதாயத்துல்லாவுக்கு தடை செய்யப்பட்ட ஸ்டூடன்ட் இஸ்லாமிக் மூவ்மென்ட் ஆப் இந்தியா (சிமி) அமைப்புடன் தொடர்பு இருப்பதாக விசாரணைகளை மேற்கொண்டு அவரையும் கடந்த 14-ம் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லா ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கொச்சின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் வரும் 22-ம் தேதி வரை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விசாரணைகளின் முடிவில் இருவரின் முழு விவரங்கள் வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.